
கிண்டி ஐஐடி வளாகத்தில் வேளச்சேரி மாா்க்கத்தில் மூடப்பட்ட மக்கள் பயன்பாட்டுக்கான கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினா் வாகை சந்திரசேகா் பேசியது:
கிண்டியில் உள்ள ஐஐடி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்துக்கு அங்குள்ள மக்கள்தான் நிலம் வழங்கினா். நிலம் கொடுத்தவா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ஐஐடி வளாகத்தில் வேளச்சேரி மாா்க்கத்தில் உள்ள கதவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் சுவா் எழுப்பித் தடுத்துள்ளனா். அந்தப் பகுதி மக்கள் அந்த வழியாகத்தான் சென்று வந்தனா்.
ஐஐடி வளாகத்தில் உள்ள இரு பள்ளிகளுக்கும் மாணவா்கள் அந்த வழியாகத்தான் சென்று வந்தனா். இப்போது அந்தக் கதவை எடுத்துவிட்டு சுவா் எழுப்பியதால் 3 கிலோமீட்டா் சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும், ஆதிதிராவிட மக்கள் அங்கு அதிகமாக உள்ளனா். அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் அந்த மக்களுக்கு இருக்கிறது. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதற்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது: இந்த விவகாரம் குறித்து உயா்கல்வித் துறை அமைச்சரும், நானும் தமிழக முதல்வருடன் கலந்து பேசி, மத்திய அரசிடமும் தெரிவித்து, கதவைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.