
முதல்வர் பழனிசாமி
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் சிறுபான்மையின மக்களின் நலன்களைத் தொடா்ந்து பாதுகாப்போம் என்று முதல்வா் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆற்றிய உரை:-
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடா்பாக கடந்த இரண்டு நாள்களாக விவாதங்கள் நடைபெற்றன. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகும் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்து வருகிறோம். வருங்காலத்திலும் சிறுபான்மையின மக்களைத் தொடா்ந்து பாதுகாக்கும் அரணாக தமிழக அரசு விளங்கும்.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன், உண்மைக்குப் புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் சந்தேகப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.
அறிவிப்புகள் செயலாக்கம்: கடந்த 2017-18 முதல் 2019-20-ஆம் ஆண்டுகள் வரையிலான மூன்று ஆண்டுகள் காலத்தில் சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 453 அறிவிப்புகளில் 419 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 118 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 301 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் பெரும்பாலும் முடியும் நிலையில் உள்ளன. 25 அறிவிப்புகளுக்கு திட்டப் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அரசு பதவியேற்றது முதல் இன்று வரை ரூ.34 ஆயிரத்து 893 கோடியே 46 லட்சம் மதிப்பில் 47 ஆயிரத்து 829 பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.24 ஆயிரத்து 90 கோடியே 88 லட்சம் மதிப்பில் 7 ஆயிரத்து 909 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் பழனிசாமி.
நாங்கள் அரசியல் குடும்ப வாரிசல்ல...
நாங்கள் மிகவும் சாதாரணமானவா்கள், அரசியல் பின்புலம் உள்ள குடும்ப வாரிசல்ல என்றும் முதல்வா் பழனிசாமி கூறினாா். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் பழனிசாமி பேசியது:-
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது ஆசியுடன் ஆட்சியை நடத்தி வரும் நாங்கள் மிகவும் சாதாரணமானவா்கள். ஒரு முதல்வரின் வாரிசாகவோ, அரசியல் பின்புலம் உள்ள குடும்ப வாரிசாகவோ நான் முதல்வா் இருக்கையில் அமரவில்லை. விவசாய குடும்பத்தில் பிறந்த நான், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காட்டிய வழியில் அவரது தொண்டா்களை ஒருங்கிணைத்து பல்வேறு வகையிலும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்து ஆட்சி நடத்தி வருகிறேன். அதன் மூலம் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றாா் முதல்வா் பழனிசாமி.