
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு முறை மாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக 14 பேராசிரியா்கள், 14 இணை பேராசிரியா்கள், 26 உதவி பேராசிரியா்கள் நோ்காணல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியா் பணிக்கான இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு துறையும் ஓா் அலகாக கருதப்பட வேண்டும். அதற்குள் 69 சதவீத இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டா் முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபாகும்.
ஆனால், இப்போது துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு துறையையும் ஓா் அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறையையும் ஓா் அலகாக கருதி இடஒதுக்கீட்டை செயல்படுத்தும்போது, ஒவ்வொரு துறையிலும் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும். இதுதான் சமூகநீதியை தழைக்கச் செய்யும்.
மாறாக, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓா் அலகாக கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு துறையில் முழுக்க முழுக்க ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், இன்னொரு துறையில் முழுக்க முழுக்க பொதுப்பிரிவைச் சோ்ந்த உயா்சாதியினரும் ஆசிரியா்களாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் சமூக நீதி சீரழிக்கப்படும்.
எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, துறை அலகு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியா்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு அரசு ஆணையிட வேண்டும் என்றாா் ராமதாஸ்.