
மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தி.மு.கழகத் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி வரும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பகை மற்றும் வெறுப்பு அரசியலை ‘இந்துத்துவா’ வெறியினர் கும்பல் தாக்குதலை அதிர்த்திருப்பதை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் போன்ற மக்கள் ஒற்றுமைக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை எதிர் கட்சி தலைவர் முன்னெடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலவீனப்பட்டிருப்பதை குற்றச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யும் அளவிற்கு பயங்கரவாதச் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.