
திருச்சியில் கமல் பேட்டி
திருச்சி: வரும் 2021ஆம் ஆண்டுதான் எங்களது இலக்காக கொண்டு பயணிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருச்சியை அடுத்த கணேசபுரத்தில் கட்சியின் 3ஆவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
எங்கள் இலக்கு 2021ஆம் ஆண்டு என்ற பயணத்துக்கான படிக்கட்டாக திருச்சியிலும் தலைமை அலுவலகத்தை தொடங்கியுள்ளோம். தலைமையை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதைத் தவிர்த்து, மக்களை நோக்கி தலைமை செல்ல வேண்டும். அதற்கான ஆரம்பம் தொடங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு இல்லை. திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. வாக்கு அளிக்க பணம் அளிக்க மாட்டோம். நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம். நடிகர் ரஜினிகாந்தை எங்களது கட்சியில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. எங்களது நல்ல நோக்கத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
தமிழகத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் பணம் மட்டும் அல்ல. நேர்மையை முதலீடு செய்யலாம். அதற்கான முயற்சியில் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் சேருவதா என்பதை நாங்கள்தான்தான் சொல்ல வேண்டும். வேறு யாரோ முடிவு செய்வதில்லை. 2021இல் திராவிடக் கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் என்று கூற முடியாது. மக்கள் மனதில் தலைமைக்கான இடம் உள்ளது. அதற்கு தகுதியானவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார் அவர்.