
திருவாதிரை திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடராஜர், சிவகாமியம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் திருவாதிரைத் திருநாள் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் மாணிக்கவாசகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராட்டினம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவினையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்திலும், சத்தியகிரீஸ்வரர் பிரியாவிடையுடன் பெரிய ரிஷப வாகனத்திலும், கோவர்த்தனாம்பிகை சிறிய ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிம்மாசனத்தில் நடராஜரும், வெள்ளி அம்பாரியில் சிவகாமி அம்மனும் எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.