
துறையூர் அருகே மது அருந்திய கூலித் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் சரவணன்(30). திருமணமாகாதவர். அதே தெருவைச் சேர்ந்தவர் ராஜூ என்பவரின் மகன் சதீஷ்(35). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலையில் தூங்கி எழுந்தவுடன் இருவரும் டீ குடிக்கச் சென்றனர். அப்போது இருவரிடமும் அதே ஊரில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட தாமோதரன்(55) என்பவர் பேச்சுக் கொடுத்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு மூவரும் அருகிலுள்ள மதுபானக் கூடத்துக்கு சென்று மூவரும் பகிர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மதுவைக் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற சரவணன் வழியில் உள்ள சைக்கிள் கடை அருகே மயங்கி விழுந்துள்ளார். காலை 11.30 மணியளவில் தாமோதரன் தனக்கு உடலில் ஏதோ செய்வதாக கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனை சென்று நிலையில் அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
பெரம்பலூருக்கு பணிக்குச் சென்ற சதீஷ் தனக்கு மயக்கம் வருவதாக கூறி மீண்டும் துறையூர் சென்று திருச்சி சாலையில உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த நிலையில் சரவணனை அந்த பகுதி மக்கள் எழுப்பிய போது அவர் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து முசிறி டி.எஸ்.பி செந்தில்குமார், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்ளிட்ட போலீஸார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சதீஸிடம் விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவ வருகின்றனர்.
மது அருந்திய நிலையில் இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துறையூரில் உள்ள மது விலக்கு போலீஸார் கணக்குக்காக எவரையாவது பிடித்து வழக்குப்பதிவு செய்யாமல் உண்மையில் சட்ட விரோதமாக மது விற்கும் நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்தால் தான் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறுகின்றனர். உயிரிழப்புக் காரணம் விலைக் குறைவான போலி மதுவாக இருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர்.