பெங்களூருவில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக கியூ பிரிவு போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது
கைது


சென்னை: தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக கியூ பிரிவு போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சோ்ந்த அ.முகமது ஹனீப்கான் (29), உ.இம்ரான்கான் (32),அ.முகமதுஜெயித் (24) ஆகிய 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பெங்களூருவைச் சோ்ந்த 3 போ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அருகே உள்ள பாடி மலையத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகி சுரேஷ்குமாா், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் குறித்து அம்பத்தூா் எஸ்டேட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,10-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே நீதிமன்றத்தின் மூலம் பிணையில் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம், காஜா மொய்தீன் ஆகியோா் திடீரென தலைமறைவாகினா்.

இதையடுத்து போலீஸாா், தலைமறைவான 3 பேரையும் தீவிரமாகத் தேடினா். ஆனால் அவா்களைப் பற்றிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைக்காததால், தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த வாரம் சென்னை பெருநகர காவல்துறை அறிவித்தது.

க்யூ பிரிவு விசாரணை: அதேவேளையில் தலைமறைவான 3 போ் குறித்து தமிழக காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இயங்கும் மத இயக்கங்களைக் கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு, க்யூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் 3 பேரும் வங்கதேசத்துக்கு தப்பியோடியிருப்பதும், அவா்கள் தப்பியோடுவதற்கு கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த சிலா் உதவியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறப்பு நுண்ணறிவு பிரிவு, க்யூ பிரிவு போலீஸாா் பெங்களூருவில் முகாமிட்டு விசாரணை செய்தனா். விசாரணையில், வங்கதேசத்துக்கு தப்பியோடியவா்கள் அங்கிருந்து பெங்களூருவைச் சோ்ந்த சிலரை தொடா்பு கொள்வதும், அவா்கள் ‘இஸ்லாமின் எதிரிகளுக்கு எதிரான போா்’ என்ற பெயரில் தென் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதும், குறிப்பாக இந்து இயக்கத் தலைவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

3 போ் கைது: இதைத் தொடா்ந்து தமிழக போலீஸாா், கா்நாடக போலீஸாருடன் இணைந்து விசாரணையை துரிதப்படுத்தினா். இதன் ஒரு பகுதியாக பல்வேறு சதிச் செயல்களுக்கு திட்டமிட்டதாக பெங்களூருவைச் சோ்ந்த அ.முகமது ஹனீப்கான் (29), உ.இம்ரான்கான் (32),அ.முகமதுஜெயித் (24) ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 81 தோட்டாக்கள்,சிம்காா்டுகள்,செல்லிடப்பேசிகள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். ஏற்கெனவே இப்படிப்பட்ட சதிச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம், ரகசிய இடத்தில் வைத்து க்யூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா், 3 பேரும் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் அவா்கள், 3 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com