

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமையுடன் (ஜன.10) முற்றிலும் நிறைவடைகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் பாதியில் மழை பொழிவு நன்றாக இருந்தது. நவம்பா் மாதத்தில் சற்று மழை அளவு குறைந்தது. டிசம்பா் மாதத்தில் பரவலாக நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை) தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 440 மி.மீ. ஆனால், இந்தப்பருவ காலத்தில் 450 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
இது இயல்பை விட 2 சதவீதம் அதிகம். இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை (ஜன.10) முற்றிலும் நிறைவு பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியது: வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பருடன் முடிவடைந்தாலும், மேற்கு திசை காற்றின் தாக்கம், வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஜனவரியிலும் மிதமான மழை பெய்து வந்தது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாள்களாக மழை அளவு குறைந்துள்ளது.
மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் வட வானிலையே காணப்படுகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை முற்றிலும் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வட வானிலை நிலவும். பெரும்பாலான மாவட்டங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.