தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு:  நெல் கொள்முதலில் நெருக்கடிகள் தீர்க்க நடவடிக்கை

தமிழகத்தில் சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதலில் உள்ள நெருக்கடிகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என அனைத்து விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு:  நெல் கொள்முதலில் நெருக்கடிகள் தீர்க்க நடவடிக்கை

திருச்சி: தமிழகத்தில் சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதலில் உள்ள நெருக்கடிகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என அனைத்து விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகம், கேரளத்தில் நல்ல மழை பெய்து, மேட்டூர் அணை உள்பட தமிழகத்தில் பாசனத்துக்குப் பயன்படும் அனைத்து அணைகளும் நிரம்பின. மேட்டூர் அணை தொடர்ந்து 100 நாள்களுக்கு மேலாக 120 அடியாக நிரம்பியிருந்தது. இதன் காரணமாக, காவிரி பாசனப் பகுதிகள் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால் அரசின் கருணை பார்வைக்கு அவர்கள் காத்திருக்கின்றனர்.

நெல்லுக்கான சந்தை

தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கோவை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் நெல்லுக்கான முக்கியச் சந்தைகளாக உள்ளன. இதேபோல, கர்நாடகத்தில் பெங்களூரு, பத்ராவதி, தேவனாகிரி, கங்காவதி, மான்விலிங்கா சுகர், ரெய்ச்சூர், டி.நரசிபூர், பங்கார்பேட், மங்களூரு, மைசூரு, தும்கூரு, பெல்லாரி மாவட்டங்களும், கேரளத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, நெடுமுடி உள்ளிட்டவையும்நெல்லுக்கான முக்கியச் சந்தைகளாக உள்ளன.

சம்பா சாகுபடி

தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான சம்பா சாகுபடி திருப்திகரமாக வந்துள்ளது. திருச்சி, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரிப் பாசன பகுதிகளில் மட்டும் 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதர மாவட்டங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 2019-20ஆம் ஆண்டுக்கான நெல்கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குவிண்டால்சன்ன ரக நெல் ரூ.1,905, பொது ரக நெல்லின் விலை ரூ.1,865 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கொள்முதல் விலையானது 2019 அக். 1 முதல் செப். 2020 வரை நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கூட்டுக் கொள்முதல் திட்டம்

மத்திய அரசின் இத் திட்டத்தின்படி மாநில அரசு விவசாயிகளிடமிருந்து உரிய முறையில் கொள்முதல் செய்து பொது விநியோக முறைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம், மார்க்ஃபெட், நபெஃட், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கம் மற்றும் டி.டி.சி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மாநில அரசானது விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கி வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் மையம்

இதற்காக தமிழ்நாடு மாநில குடிமைப் பொருள் வழங்கு துறையின் கீழ் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 1300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 353 மையங்கள் உள்ளன. நெல் தானியங்களை அறுவடை செய்தவுடன் விவசாயிகள் இந்த மையங்களிலிருந்து டோக்கன் பெற்றுக் கொள்கின்றனர். டோக்கன் எண் வரிசைப்படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

முத்தரப்புக் கூட்டம்

வழக்கமாக சம்பா அறுவடைக் காலத்தில் அறுவடைக்கு முன்பாக விவசாயிகள், அரசு, நுகர்பொருள் வாணிபக் கழகம் என முத்தரப்பினர் கூடி கொள்முதல் தொடர்பாக ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அறுவடை தொடங்கியும் இதுவரை முத்தரப்புக் கூட்டம் நடைபெறவில்லை என்கின்றனர் விவசாயிகள். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலைக்கு தாங்கள் ஆளாகி வருவதாகவும் புகார்கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் கூறியது:

கிடைத்த தண்ணீரைப் பயன்படுத்தி கடன்களைப் பெற்று சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடித்துவிட்டனர் விவசாயிகள். இப்போது, அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், போதுமான அளவுக்கு நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட நிலையங்களிலும் சாக்கு இல்லை, சுமை தூக்கும் தொழிலாளி வரவில்லை, சரக்கு வாகனம் வரவில்லை எனக் கூறி விவசாயிகளைக் காத்திருக்கச் செய்கின்றனர். இதனால், நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பனியிலேயே இருப்பதால் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துவிடுகிறது. இதனால் விலையும் குறைத்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது நெல்லை அளக்க விவசாயிகள் தனியாகப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. பல்வேறு நிலைகளில் குவிண்டாலுக்கு ரூ. 75 வரை பிடித்தம் செய்து விடுகின்றனர். ஏற்கெனவே பற்றாக்குறை விலை இருக்கும்போது பிடித்தமும் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியது:

நெல்லுக்கான உற்பத்திச் செலவானது ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ. 27 செலவிட வேண்டியுள்ளது. ஆனால், குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூ.1,905, பொது ரகத்துக்கு ரூ.1,865 என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வரை விவசாயிகள் இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, கொள்முதல் விலையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார்.

தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள்!

சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக வேளாண் துறையினர் கூறியது:

தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா அறுவடை தொடங்கியுள்ளது. இதுவரை 450 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 21-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூரில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினத்தில் வரும் 22-ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்படும். மேலும், தேவைக்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடி நிலைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com