விவசாயப் பண்ணைகளை பாதுகாக்க வேண்டும்

ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தென்னை வீரிய ஒட்டுவிதை, தோட்டக்கலை, மாநில எண்ணெய் வித்து ஆகிய பண்ணைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி
விவசாயப் பண்ணைகளை பாதுகாக்க வேண்டும்


ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தென்னை வீரிய ஒட்டுவிதை, தோட்டக்கலை, மாநில எண்ணெய் வித்து ஆகிய பண்ணைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி லாபகரமான, மாதிரி விவசாயப் பண்ணையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட அவரக்கரை கிராமம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான மூன்று விவசாயப் பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணை வளாகத்தில் 200 ஏக்கரில் தென்னை வீரிய ஒட்டுவிதைப் பண்ணையும், 211.6 ஏக்கரில் தோட்டக்கலைப் பண்ணையும், 66.16 ஏக்கரில் மாநில எண்ணெய் வித்துப் பண்ணையும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னை வீரிய ஒட்டுவிதைப் பண்ணையில் 8 ஆயிரம் நெட்டை, குட்டை தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து வீரிய ஒட்டு ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, முந்திரி, புளி, தைலம், இலந்தை உள்ளிட்ட பழக்கன்றுகளும், காய்கறி நாற்றுகள், பூஞ்செடிகள் ஆகியவையும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் அருகில் உள்ள எண்ணெய் வித்துப் பண்ணையில் நெற்பயிர் வகைகள், காராமணி, கேழ்வரகு, உளுந்து, பச்சைப் பயிர் உள்ளிட்ட விதைகள் பயிர் செய்து விதைகளாக மாற்றப்பட்டு வட்டார வேளாண் அலுவலகங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நவ்லாக் பண்ணையில் தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க பாலாற்றில் மணல் திருடப்படுவதையும், பண்ணையை ஒட்டியுள்ள பாலாற்றில் ஆங்காங்கே உறை கிணறுகள் அமைக்கப்படுவதையும் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

மேலும் பண்ணையைச் சுற்றிலும் கம்பி வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைத்து கால்நடைகளிடம் இருந்து காக்க வேண்டும். பண்ணையில் உள்ள விலையுயர்ந்த தேக்கு மரங்கள், இளநீர், தேங்காய் உள்ளிட்ட விளைபொருள்கள் திருடு போவதையும் இதன் மூலம் தடுக்க முடியும். மேலும் பண்ணை முழுவதிலும் உள்ள மண் சாலைகளைப் பராமரித்து தார்ச்சாலைகள் அமைத்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும்.

மூன்று பண்ணைகளிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 80-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி, அரசு ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

"நவ்லாக் அரசுப் பண்ணை விவகாரத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, அதன் மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தென்னை வீரிய ஒட்டுவிதை, தோட்டக்கலை, மாநில எண்ணெய் வித்து ஆகிய மூன்று பண்ணைகளையும் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் பண்ணைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும்' என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com