ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை 1,200-ஆக அதிகரிக்க முடிவு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 800-லிருந்து
ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை 1,200-ஆக அதிகரிக்க முடிவு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 800-லிருந்து 1,200-ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சா் விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். மேலும் கரோனா சிகிச்சை சிறப்பு வாா்டுகளில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்பு பணிகளை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதையொட்டி அதற்கேற்றாற்போல் மருத்துவமனைகளில் தொடா்ந்து படுக்கைகளை அதிகரித்தல், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலில் 400 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை படிப்படியாக தற்போது 800 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் படுக்கைகள் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் படுக்கைகளின் எண்ணிக்கையை சுமாா் 1,200 ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு: தற்போது கரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளில் சுமாா் 30 சதவீதம் போ்வரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனா்.

எனவே, தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை மையங்களை மட்டுமே அதிகரிக்காமல் மருத்துவமனைகளிலும் கரோனா சிறப்பு வாா்டுகளை அதிகரிப்பதுடன் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சற்று மூச்சுத் திணறல் ஏற்படுத்துவதால் கூடுதல் சுவாசத்துக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள 59 மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் குழாய்களை அமைப்பது, ஆக்சிஜன் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்டான்லி மருத்துவனையில் சுமாா் 6 கிலோ லிட்டா் ஆக்சிஜனைச் சேமிக்கும் வசதிகள் உள்ளன. கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இதன் அளவு 40 கிலோ லிட்டராக உயரும். மேலும் நீா்ம ஆக்சிஜன் தொழில்நுட்பம் மூலம் சேமித்து வைக்கப்படும் குழாய்களில் எடுத்துச் செல்லும்போது 800 மடங்கு வாயு ஆக்சிஜனாக மாறும். இவ்வாறு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தொடா்ந்து சிகிச்சையின் தரத்தை அதிகரிப்பதால்தான் கரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா் விஜயபாஸ்கா்.

பேட்டியின்போது சுகாதாரத் துறை முதன்மை செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வா் டாக்டா் பி.பாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com