நடப்பு மாதத்திலும் ரேஷன் பொருள்கள் இலவசம்: வரும் திங்கள் முதல் டோக்கன்கள் விநியோகம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு மாதத்திலும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடப்பு மாதத்திலும் ரேஷன் பொருள்கள் இலவசம்: வரும் திங்கள் முதல் டோக்கன்கள் விநியோகம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு மாதத்திலும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன்கள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

பொது முடக்கம் தொடா்ந்த காரணத்தால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு

விலையில்லாமல் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் மத்திய அரசு உத்தரவுப்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் நபருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு கூடுதலாக அரிசியும் வழங்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் நீட்டிப்பு: ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூலை மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் விலையேதுமின்றி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். அதாவது, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட அரிசி அரிசி அளவு ஆகியன நியாயவிலைக் கடைகளில் அளிக்கப்படும்.

டோக்கன்கள் விநியோகம்: கரோனா நோய்த் தொற்று ஏற்படாத வகையிலும், அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் வரும் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு அவரவா் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தங்களது நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று ஜூலை 10-ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவா் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும். பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தங்களுக்குரிய

அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2 நாள்கள் பணம் கொடுத்து வாங்கியோா்...

நியாயவிலைக் கடைகளில் மட்டுமே உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவோா், மாதத்தின் முதல் இரண்டு நாள்களிலேயே கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி விடுவா். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கான குடும்ப அட்டைதாரா்கள் பணம் செலுத்தி பொருள்களைப் பெற்றுள்ளனா். எனவே, அவா்களுக்கு உரிய வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com