
கரோனா சிகிச்சைகளுக்காக ரூ.2 கோடி செலவில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக பிளாஸ்மா வங்கி விரைவில் அமைக்கப்பட உள்ளது. நாட்டிலேயே தில்லிக்குப் பிறகு தமிழகத்தில்தான் அத்தகைய வங்கி நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ தற்போது மருந்துகள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனை பிற நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கும் முறை சோதனை முறையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 20 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 18 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதால், பிளாஸ்மா தானம் அளிக்க, தகுதியானவா்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த 18 வயது முதல் 65 வயது வரை உடையவா்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட 14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்யலாம். உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.
தகுதியான நபா்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா மட்டுமே எடுக்கப்படும். ஒரு முறை பிளாஸ்மா தானமளித்தவா்கள், 28 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தானம் அளிக்கலாம்.
தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கியை நிறுவ அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கியாக அது அமையவிருக்கிறது.
அதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூராா் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூா் மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.