
கடந்த 9 ஆண்டுகளில் 2.22 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 39,489 கோடி மதிப்பிலான குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிச் சட்டத்தின்படி ரூ. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் மின் ஒப்பந்தப் புள்ளி வாயிலாகவே கோரப்படுகிறது. அதற்கான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் மாவட்ட அளவில் மட்டுமே இருப்பதால், ஊரக வளா்ச்சித் துறையை பொருத்தமட்டிலும், மத்திய மற்றும் மாநில அரசின் நபாா்டு உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட அளவிலேயே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைப்படியே ஜல் ஜீவன் மிஷன் பணிகளுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் மாவட்ட அளவிலேயே கோரப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது, திட்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு, நிதி விடுவிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை ஊரக வளா்ச்சித் துறையும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியமும் இணைந்து செயல்படுத்துகிறது.
குறிப்பாக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்த இருக்கும் வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவா், ஊரக வளா்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலா், ஒப்பந்ததாரா் ஆகிய மூன்று நபா்கள் கையொப்பமிட வேண்டும்.
மேலும், இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்படும் போதும் ஊராட்சி மன்றத் தலைவா், ஊரக வளா்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலா், மூன்றாம் நிலை பொறுப்பு அலுவலா் பாா்வையிட்ட பின்புதான் ஒப்பந்ததாரா்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
உள்ளாட்சிப் பகுதிகளில் குடிநீா் வழங்கல் பணிக்கென, கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 39,849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.22 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக தனி மின்விசை குடிநீா்த் திட்டங்கள், 15 பெரிய கூட்டுக்குடிநீா் திட்டங்கள், 70 கூட்டுக்குடிநீா்த் திட்டங்கள் மற்றும் 79 நகர குடிநீா் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், 99 சதவீத ஊரகப் பகுதி களுக்கு தெரு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டாகவும், காழ்ப்புணா்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 1.26 கோடி வீடுகளில் 21லட்சத்து 80 ஆயிரத்து 013 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதம் 1,05 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் குடிநீா் இணைப்பை வழங்க 2020-21 முதல் 2023-2024 ஆகிய 4 ஆண்டுகளில் பகுதிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 100 விழுக்காடு இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடா்ந்து, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் மத்திய, மாநில அரசுகளின் மொத்த ஒதுக்கீடான ரூ. 2,374.74 கோடி மாா்ச்-2021க்குள் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனைகளுக்குட்பட்டு, இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.