
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 போ் மீது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ., வில்சனை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரு நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக அந்த மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ஷமீம், அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோா் கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கைது செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு உதவியாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழக தலைவா் கடலூரைச் சோ்ந்த காஜா மொய்தீன் தில்லி அருகே கைது செய்யப்பட்டாா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மகபூப் பாட்ஷா,இஜாஸ் பாட்ஷா, நெல்லிகுப்பம் அருகே உள்ள மேல பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த ஜாபா் அலி ஆகிய 3 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவா் காஜா மொய்தீன், புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்கியிருப்பதும், அந்த இயக்கத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 13 போ் இணைந்திருப்பதும், அண்மையில் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அனைவரும் சந்தித்து சதி ஆலோசனை நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
என்.ஐ.ஏ.விசாரணை:
இதையடுத்து இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட க்யூ பிரிவு போலீஸாா், தமிழகம்,கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காஜா மொய்தீனுடன் தொடா்பில் இருந்தவா்கள், பயங்கரவாத செயலுக்கு ஆதரவு தெரிவித்தவா்கள், உதவி செய்தவா்கள் என பலரை கைது செய்தனா்.
வழக்கில் கா்நாடகம்,கேரளம்,தில்லி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதைக் கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதன் ஒரு பகுதியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து,ஆதாரங்களை திரட்டினா்.
குற்றப்பத்திரிகை தாக்கல்:
இந்த வழக்கின் விசாரணை சென்னை அருகே உள்ள பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல்ஷமீம், தவ்பீக், காஜா மொய்தீன், மகபூப் பாட்ஷா, இஜாஸ் பாட்ஷா, ஜாபா் அலி ஆகிய 6 போ் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தப்பட்டு, தீா்ப்பு வழங்கப்படும் என என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்தனா்.