பிட்காயின் மோசடியில் ஏமாந்த மக்கள்: சேலத்தில் காவல்துறையினர் ஆட்டோவில் விழிப்புணர்வு

சேலத்தில் பிட்காயின் மோசடியில் ஏமாந்த மக்களுக்கு காவல்துறையினர் ஆட்டோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சேலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்
சேலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்

சேலத்தில் பிட்காயின் மோசடியில் ஏமாந்த மக்களுக்கு காவல்துறையினர் ஆட்டோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வட்டார பகுதிகளில் பிட்காயின் உள்ளிட்ட அனுமதியில்லாத இணையதள பணப் பரிவர்த்தனையில் பல தரகர்கள் மூலம் ஏராளமானோர் குறைந்தது ஐம்பதாயிரம் முதல் பல லட்சங்களை பணம் இரட்டிப்பாகும் ஆசையில் கடந்த சில மாதங்களாக முதலீடு செய்துள்ளனர்.

அனுமதியற்ற இந்த வகை பணப் பரிவர்த்தனைகளில் ஆரம்பக்கட்ட காலத்தில், பணத்தை இரட்டிப்பாகப் பலர் பெற்றனர். அதனையடுத்து பலரும், இவைகளில் அதிக முதலீடு செய்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக அத்தகைய மோசடி இணையதளத்தினர், பங்குத்தொகையாக பெற்ற பணத்தை ஏமாற்றிவிட்டனர். 

இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இதுபோன்ற அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகளில் சுமார் ஒரு கோடி ரூபாய், முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிட்காயின், பணம் இரட்டிப்பு உள்ளிட்டவற்றில் பணத்தை போட்ட பலர், தாங்கள் ஏமாற்றமடைந்ததை வெளியே கூற வெட்கப்பட்டு, போலீசில் புகார் கொடுக்கக்கூட வரத்தயக்கம் காட்டிவருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் துறையினர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து, விழிப்புணர்வு பணி செய்யப்பட்டது. காவல்துறையினர் அமைத்த ஒலிபெருக்கியில், பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த தொகையை சேமிக்க, அரசு அங்கீகரித்த வங்கிகளிலும், கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பணத்தை போட வேண்டுகின்றோம். 

இத்தகைய வங்கிகளில் நல்ல வட்டிகள் தரப்படுகிறது. சிலர் அதிகவட்டி தருவதாகவும்,இரட்டிப்பு பணம் தருவதாகவும், பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்களை ஆரம்பித்து, மக்களது பணத்தை முதலீடு செய்ய ஆசை வார்த்தைகள் கூறி, யாராவது அணுகினால், பொதுமக்கள் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். பிட்காயின், மல்டிலெவல் மார்க்கெட்டிங், இரட்டிப்பு பணம் தரும் திட்டம் போன்ற பெயர்களில் தங்களை யாராவது அணுகினால், சேலம் மாவட்ட காவல்துறைக்கோ, அருகிலுள்ள காவல்நிலையத்திற்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com