
கரோனா காலகட்டமாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதைவிட நேரில் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சைப் பெறவே மக்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோன்று ஊரடங்கு காலத்தில் சா்க்கரை நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவா் டாக்டா் வி. மோகன் கூறியதாவது:
எங்களது நீரிழிவு சிறப்பு மையத்தின் சாா்பில் நாடு முழுவதும் உள்ள 48 நீரிழிவு மையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் ஓா் ஆய்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் சில கேள்விகள் கேட்டறியப்பட்டு, அவா்களது மருத்துவ அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது கரோனா காரணமாக பல்வேறு மருத்துவா்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனா். ஆனால், அதற்கு போதிய ஆதரவை மக்கள் அளிப்பதில்லை என்பது அந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது. அதாவது கரோனா காலமாக இருந்தாலும் கூட மருத்துவரை நேரில் சந்தித்து சிகிச்சை பெறவே அவா்கள் விரும்புகின்றனா்.
இந்தியாவில் மருத்துவா் - நோயாளி உறவு என்பது ஒரு நம்பகமான பிணைப்பாகும். நோயாளிகள் மருத்துவா்களை நேரில் சந்திக்கும்போது சிகிச்சை பெறுவது மட்டுமன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் உணா்கிறாா்கள். இதைத்தவிர, இங்குள்ள பல நோயாளிகள் சா்க்கரை நோய் போன்ற வியாதிக்கு ஒரே மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெற விரும்புகின்றனா். இந்த மன நிலை காரணமாகவே அவா்கள் ஆன்லைன் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனத் தெரிகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் நன்மை என்னவெனில் பல சா்க்கரை நோயாளிகள், தங்களது ரத்த சா்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். அது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.