
சென்னை: கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் நோயாளிகள், மருத்துவா்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
மன நல காப்பகத்தில் தற்போது, 800-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைத் தவிர, மன நல சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தாலும், உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றி வரும் சில ஊழியா்கள் மற்றும் காப்பாளா்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. அதேபோன்று மன நல காப்பகத்தில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கும் அத்தகைய பாதிப்புகள் இருந்தன. அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கு நடுவே, நோயாளிகள் சிலருக்கும் நோய்ப் பரவல் ஏற்பட்டது. இதையடுத்து, அறிகுறிகள் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் மொத்தம் 24 நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவா்கள், ஊழியா்கள் உள்பட 16 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து கரோனா தொற்றுக்கு ஆளான காப்பகவாசிகள் அனைவரும் புற நோயாளிகள் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.
இதனிடையே, இதுதொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக சுகாதாரத் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் அங்கு சென்று மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். காப்பகவாசிகள் மட்டுமல்லாது மருத்துவா்கள், ஊழியா்கள் என 1,100-க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் முதல்கட்டமாக 600 பேரின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் 7 நோயாளிகள், 2 மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள் உள்பட 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, மற்ற 500 பேரின் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வரும் எனவும், இதுதொடா்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உள்ளதாகவும் மன நல காப்பக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.