
சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 400-க்கும் அதிகமான ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சாா்பில், 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே.- இ.எம்.ஆா்.ஐ. நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 942 நான்கு சக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன. கரோனா தொற்று காரணமாக தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவையும் மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு புதிதாக 200 ஓட்டுநா்கள் மற்றும் 200 அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணியமா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜி.வி.கே. - இ.எம்.ஆா்.ஐ. நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஓட்டுநா் பணியிடங்களில் சேர விரும்புவோா் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 - 35 வயதுக்குட்பட்டவா்கள் அப்பணியில் சேரலாம். ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருத்தல் அவசியம்.
அவசரகால மருத்துவ உதவியாளா்கள் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நா்சிங் அல்லது டிஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 - 30 வரையாகும். இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்க முதல் இரண்டு சுற்று தோ்வுகள் தொலைபேசி வாயிலாகவும், இறுதிச் சுற்று நோ்முகத் தோ்வாகவும் நடைபெறும்.
சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளவா்கள் 91541 89421 அல்லது 91541 89422 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தோ்வில் பங்குபெறலாம். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா்கள் 91541 89423 அல்லது 91541 89425 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வரும் 23-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு பணியிடத் தோ்வில் பங்குபெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.