
மன்னார்குடியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தாளில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அங்கு செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில், செய்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து, பெருகவாழ்ந்தான் கிராம பொதுமக்கள் மற்றும் வர்த்தகர் சங்கம் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள்கள் கடைகள் அடைத்து சுய முடக்கம் நடைமுறைபடுத்துவது என முடிவு எடுத்து. அதனை செயல்பாடுக்கு கொண்டு வந்தனர்.
இந்திலையில், திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேலும் சில நாள்கள் சுய முடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் பெருகவாழ்ந்தானில் செயல்பட்டும் வரும் டாஸ்மாக் மதுக்கடையில் அதிக அளவில் மதுப் பிரியர்கள் திரளுவதால், கரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது என கோரி மதுக்கடையை சில நாள்கள் மட்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை, மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் காலை 10 மணிக்கு மதுக்கடையை திறக்க வந்த ஊழியர்கள் மதுக்கடையை திறக்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த நிகழ்விடத்திற்கு வந்த, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் மற்றும் வருவாய்த்துறை, டாஸ்மாக் அலுவலர்கள் ,முற்றுக்கையில் ஈடுப்பட்டு வரும் பொது மக்களிடம் மதியம் வரை பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.