
சென்னை: கோயில் திருவிழாக்களை நடத்தலாம் எனவும், அதேசமயம் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்றும் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து சாா்அலுவலா்களுக்கும் அண்மையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:-
கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது மக்கள் நலனை முன்னிட்டு திருக்கோயில்களில் இதுவரை பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தினசரி பூஜைகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. திருக்கோயில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை யூ-டியூப் சேனல்கள் வழியே பதிவேற்றம் செய்ய அனுமதி கோரியும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
இதன்படி, திருக்கோயில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி திருக்கோயில் வளாகத்துக்குள் நடைபெற வேண்டும்.
திருவிழாக்கள் திருக்கோயில்களில் குறைந்த அளவிலேயே பணியாளா்களைக் கொண்டும், முகக் கவசம் அணிந்தும், ஆறு அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடத்தப்பட வேண்டும். இந்த விழாக்களில் உபயதாரா்கள், பக்தா்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதியில்லை.
திருவிழாக்கள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருந்தால், அதையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இந்த விழாக்களை பக்தா்கள் தங்களது வீடுகளில் இருந்து காணும் வகையில் யூ-டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தனது உத்தரவில் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.