
தேனியில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்
தேனியில் கடையடைப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து செவ்வாய்க்கிழமை, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் எரிபொருள் விநியோக நிறுவனங்களை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில வியாபாரிகள் சங்கங்கள் தாமாக முன் வந்து முழு கடையடைப்பை அறிவித்தனர். இதன் அடிப்படையில், அனைத்து இடங்களிலும் கடைகளை அடைக்க காவல் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேனியில் முக்கிய கடைத் தெருக்களான இடமால் தெரு மற்றும் பகவதியம்மன் கோயில் தெரு பகுதிகள் கடந்த 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், கடைகளைத் திறக்க முடியாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைகள் மற்றும் உணவகங்களைத் திறப்பதில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருவதாகவும் புகார் தெரிவித்து, தேனி- மதுரை சாலையில் உள்ள பகவதியம்மன் கோயில் திடலில் வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் தேனி காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, நோய் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மட்டும் கடைகளை முழுமையாக அடைக்க வேண்டும், மற்ற இடங்களில் நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறக்கலாம், இடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு பகுதிகளில் ஓரிரு நாட்களில் நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.