காலத்தில் கரையாத கோவை ஞானி

கோவை ஞானியின் மறைவு குறித்து எண்ணும் பொழுது, "தமிழுக்குத்  தொண்டு செய் தோன் சாவதில்லை" எனும்  தமிழ்க் கவிஞனின் வாக்குத்தான் நினைவில் மின்னலிடுகிறது.
கோவை ஞானி
கோவை ஞானி

கோவை ஞானியின் மறைவு குறித்து எண்ணும் பொழுது, "தமிழுக்குத்  தொண்டு செய் தோன் சாவதில்லை" எனும்  தமிழ்க் கவிஞனின் வாக்குத்தான் நினைவில் மின்னலிடுகிறது. தனது 86 ஆண்டு கால வாழ்வில் கோவை ஞானி அவர்கள் எழுதிக் குவித்த கட்டுரைகளுக்கும், நூல்களுக்கும் அளவில்லை.

அவரது அறிவுப் பரப்பு மிக விரிந்தது. சங்க இலக்கியம், புதுக்கவிதை, நாவல், சிறுகதை, திறனாய்வு, அரசியல் கட்டுரைகள்  எனத் துறைதோறும் தனது முத்திரைகளை அவர் பதித்துக் கொண்டே இருந்தார்.  

" தமிழின் வழியேதான் இளமை முதற்கொண்டு, அறிவும் உணர்வும் எனக்குள் நுழைந்தன. பயிர்களும், உயிர்களும், வானமும், கடலும், தாவரங்களும், பறவைகளும் - இப்படி ஆயிரக்கணக்கானவை எனக்குள் பதிந்தது தமிழோடு சேர்ந்துதான்.  கோவலனும், கண்ணகியும், மணிமேகலையும் எனக்குள் தங்கி உள்ளார்கள். வள்ளுவரை எனக்குள் நான் தரிசிக்கிறேன். கணியன் பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்த்து வருகிறார். ஆழ்வார்களோடும், நாயன்மார்களோடும் நானும் கலந்து இருக்கிறேன். எனக்கு வயது 1000. தமிழ் வரலாற்றின் இழைகள் என்னுள் பதிந்துள்ளன" என ஞானி தனது இலக்கியச்சிந்தனையின் ஊற்றுக்கண் குறித்துப் பதிவு செய்கிறார். 

சங்க இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் அவர் திறனாய்வு செய்தார். அதன் வழி  தமிழுக்குப் புதிய திறப்புகள் உருவாயின. தனது மெய்யியலைத் "தமிழ் அறம்" என்பதாக அவர் அடையாளங் காட்டுகிறார்.  தமிழ் அறத்தின் மையக் கண்ணியாக "ஒப்பரவு" இருக்கிறது என்பது அவரது உறுதியான பார்வை. 

பழந்தமிழ் இலக்கியங்களையும், நவீன இலக்கியப் படைப்புகளையும் தொடர்ந்து திறனாய்வு செய்து வந்தாலும், தன்னை ஓர் இலக்கிய மாணவன் என்றே பிரகடனப் படுத்தினார். 

கோவையில் இயங்கி வந்த சிந்தனை மன்றம் வழியாகத் தனது அறிவைக் கூர் தீட்டிக் கொண்டார். சத்தியமங்கலம் எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ராஜதுரை ஆகியோருடன் இணைந்து "புதிய தலைமுறை" எனும் முற்போக்கு இதழை வெளிக் கொணர்ந்தார். 

வானம்பாடி இயக்கம் கோவையில் தோற்றம் கண்ட பொழுது, அதில் தன்னைக் கரைத்துக் கொண்டார். கவிஞர் சிற்பி, புவியரசு, ஈரோடு தமிழன்பன், சிதம்பரநாதன், முல்லை ஆதவன், சக்தி கனல், இளமுருகு, தேனரசன், தமிழ்நாடன் ஆகியோரோடு இணைந்து வானம்பாடி இயக்கத்தின் மூலம் தமிழ்க்கவிதை உலகில் அதிர்வுகளை உருவாக்கினார்.  

தமிழ் சார்ந்து எடுக்கப்படும் விழாக்கள், நிகழ்வுகள் வெறும் சடங்குகளாகப் போய்விடக் கூடாது என்பதற்காக அவை குறித்து மாற்றுப் பரிந்துரைகளை அவர் எடுத்துரைத்து வந்தார். இதனால் அவர் மீது வீசப்பட்ட விமர்சனக் கணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அதே போல், தமிழ் சார்ந்தும், தமிழ் மக்கள் சார்ந்தும் எதிர் கருத்துகள் பொது அரங்குகளில் பேசப்பட்டால், சிலிர்த்தெழுந்து அவர்களைக் கேள்வி கேட்பதற்கு அஞ்சாதவராகவே விளங்கினார் அவர்.

1994 ஆம் ஆண்டு 'கல்லிகை', 'எனக்குள் ஒரு வானம்' எனும் இரு குறுங்கவியங்களைப் படைத்தார். "எனது கவிதைகளில் சிறந்தது என்று 'கல்லிகை' யை நான் குறிப்பிட்டுக் கொள்ளலாம்" என ஒரு பேட்டியில் ஞானியே பதிவு செய்துள்ளார்.

தமிழ் வழிக் கல்வியை தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்ததோடு,  தாய்த் தமிழ்ப் பள்ளிகளோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார். அவற்றின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். 

பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் எனப் பல பத்திரிகைகளைப் பல்வேறு காலகட்டங்களில் அர்ப்பணிப்போடு நடத்தி வந்தார். சர்வதேச அளவில் பேசப்பட்ட முக்கியமான பல கவிதைகளையும், கட்டுரைகளையும்  திரட்டி, அவற்றைத் தக்கோர் மூலம்  மொழியாக்கம் செய்து தொகுத்து  வெளியிட்டார்.

அன்றன்று வெளிவந்த நவீன இலக்கியப் படைப்புகளை அயராமல் படித்து அவை குறித்த தனது எதிர்வினையைப் பதிவு செய்தார். அவரது திறனாய்வுகள் மூலம் வளரும் புதிய எழுத்தாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

இலக்கியம், மனித விழுமியங்களை மேம்படுத்த வேண்டும் எனவும், கலைகள் நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். "சமூகத்தில்  பல்வேறு வகையான, பலதரப்பட்ட வாழ்க்கை நிலைகள் உள்ளன. இவை எல்லாக் காலத்தும் பல்வகைப் பிரச்சனைகளோடு இருக்கின்றன. இப்பொழுது இப்பிரச்சனைகள், சிக்கல்கள் கடுமையாயிருக்கின்றன. இவற்றுக்கான காரணங்களும் ஆழப்பட்டுள்ளன. இப்பிரச்சனைகளை இலக்கியம் வெளியிடுகிறது. இதைச் சரியாக வெளியிட்டால், அதுவே பிரச்சனையினுடைய தீர்வுக்கான எண்ணங்களையும், விருப்பங்களையும், முயற்சிகளையும் தூண்டும். இத்தன்மையுடைய இலக்கியம், முற்போக்கு இலக்கியம். உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல் வெறும் வணிக நோக்கோடு வெற்றுக் கற்பனை அழகுகளோடு, தானும் ஓர் எழுத்தாளனாக இருக்க வேண்டுமென்ற பெருமையோடு செய்யக் கூடியவை பிற்போக்கு இலக்கியம் " என அவர் வரையறுத்தார். 

ஈழத்துத் தமிழ் அறிஞர்களான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது கட்டுரைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவர்தம் கருத்துக்களைத் தமிழகத்தில் பரவலாக்கினார். புதுவை இரத்தினதுரை, எஸ்.பொன்னுதுரை போன்ற ஈழ எழுத்தாளர்களைப் போற்றிக் கொண்டாடினார். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை அவரை மிகவும் பாதித்தது. அதனால் அதுகுறித்த போராட்டங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கேற்றார்.

மகளிரது மேம்பாட்டிலும், விடுதலையிலும் மிகுந்த கரினத்தோடு இருந்தார். பெண் எழுத்தாளர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததோடு, மகளிருக்கெனச் சிறுகதைப் போட்டிகளைத் தனியே நடத்தி, பிறகு அவற்றை நூல்களாக அவரே வெளியிட்டார்.

தமிழகத்தின் இயற்கை வளங்கள் இந்திய மற்றும் அந்நிய நாட்டு முதலாளிகளால் சூறையாடப் படுவதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்தார். அது சார்பான இயக்கங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராட்டங்களில் பங்கேற்றார். அவரது சூழலியல் அக்கறையை அவரது எழுத்துக்களில் பரவலாகக் காணமுடியும்.

தமிழாசிரியராகத் தொடங்கி ஞானாசிரியனாக அவர் பரிணாமம் அடைந்ததற்கு மார்க்சியம் அவருக்குத் துணை நின்றது. தன்னை ஒரு மார்க்சிய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் அவர் எப்பொழுதும் பெருமகிழ்வு கொண்டார்.  

தமிழிலக்கியங்களில்  நிலவும் மார்க்சியக் கூறுகளை ஈர்க்கத் தக்க முறையில் நிரல்படுத்தினார். முற்போக்கு இலக்கியங்களின் செல்நெறி குறித்துக் காத்திரமான கருத்துகளை எடுத்துரைத்தார். மார்க்சியத்தினுள் புதிய சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாதது எனவும், அவற்றைப் பகை நிலையில் வைத்துக் காண வேண்டியதில்லை எனவும் சுட்டிக் காட்டினார். "நூறு பூக்கள் மலரட்டும் " எனத் தனது சிந்தனை வானை விரிவாக்கி வைத்திருந்தார். 

மார்க்சிய அடிப்படை நூல்கள் சுவிசேஷ மொழியில் எழுதப்படாமல், எளிய தமிழில் எழுதப்பட வேண்டும் எனக் கூறியதோடு நில்லாமல், அவரே சில முன்னுதாரணங்களையும் உருவாக்கினார். 

சத்தி எஸ்.என். நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி ஆகிய மூவரும் ஓர் ஆயுத எழுத்துப் போல அன்றைய காலகட்டத்தில் இயங்கி வந்தனர். மார்க்சி யத்தை மார்க்சிய - இலெனினிய  வழியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.  

தனது கொள்கையை ஞானி அவர்கள் எப்பொழுதும் ஒளித்து மறைத்துப் பேசாதவராகவே திகழ்ந்தார். மார்க்சியமே தனக்கு வழிகாட்டி என இறுதி வரை உறுதியாக ஊன்றி நின்றார்.

மார்க்சியத்தில் சர்வதேச அளவில் புதிது புதிதாகக் கிளைத்துவரும் போக்குகளை அடையாளம் கண்டு அதைத் தமிழுக்குக் கடத்துவதில் கருத்தாக இருந்தார். தமிழில் பட்டம் பெற்றவராக இருந்தாலும், அரிதின் முயன்று மார்க்சியம் குறித்து ஆங்கிலத்தில் மிக அண்மையில் வெளிவந்த நூல்களை எல்லாம் தேடித் தேடிக் கற்று வந்தார்.  மேலும் அது குறித்து அவரைச் சுற்றியிருந்த அறிவர் குழுவினரிடையே மிகத் தீவிரமாக விவாதித்தார். 

ஒரே சமயத்தில் கற்றுக் கொடுப்பவராகவும், கற்றுக் கொள்பவராகவும்  விளங்கினார் அவர். 

முற்றிலும் பார்வையற்ற ஒருவர் இத்துணை தூரம் படிக்க முடியுமா, எழுத முடியுமா என வியக்க வைக்கும் வாழ்வு,  ஞானி அவர்களது வாழ்வு. அவ்வகையில் அவர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு எனத் தயக்கமின்றிக் கூறலாம். 

1990 கால கட்டத்தில் அவரது பார்வை சர்க்கரை நோயால்  முற்றிலும் பறிபோன பிறகும், அவரது உதவியாளர்கள் மூலம் படிப்பைத் தொடர்ந்தார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், படிப்பதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

காலப்போக்கில் அவரது சிந்தனையைத் தமிழ் - தமிழ்நாடு - தமிழக மக்கள் என்பவையே ஆட் கொண்டன. எனவேபழந்தமிழ் இலக்கியங்களை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து, புதிய திறப்புகளை உருவாக்கினார்.

அவரது தமிழ்த் தேசியம், சாதி மறுப்பு - மத நீக்கம் - சூழலியல் கரிசனம்  என்பதாக விரிந்திருந்தது.  தமிழிலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் மிக்கவராக இருந்ததால், தமிழ்த் தேசியம் குறித்துத் துல்லியமான பங்களிப்பை அவரால் வழங்க முடிந்தது. 

நண்பர்கள் என்றாலே அவருக்குக் கொண்டாட்டம்தான். எனவே அத்தருணங்களில், அவர் கரைந்து போய் விடுவார். தொடர்ந்து இலக்கியம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் இயக்கங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்துவார். இயக்கங்கள்தான் முன்னேற்றத்தின் நாற்றங்கால் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் வானம்பாடி, இலக்கு போன்ற இலக்கிய இயக்கங்களில் அவர் பங்களிப்புச் செய்தார்.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளின் இணைப்பும், அதன் வழி முகிழ்க்கும் இயக்கங்களும்தான் இன்றைய உடனடித் தேவை என்பதைத் திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். 

ஒரு சில கூறுகளில் அவரிடமிருந்து நாம் வேறுபடலாம். ஆனால், நீரடித்து நீர் விலகாது என்பது போல், அவரது வசீகரமான தமிழும், புதுமைச் சிந்தனைகளும்  என்றென்றும் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

அவர் எழுதிக் குவித்த எண்ணற்ற  நூல்களின் வழி அவர் என்றென்றும் நம் நினைவுகளில் நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

[கட்டுரையாளர் - எழுத்தாளர், அரசியற் செயற்பாட்டாளர்

மற்றும் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com