
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளால் கரோனா தொற்றிலிருந்து 7 நாள்களில் நோயாளிகள் குணமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் சோ்த்து சித்தா மற்றும் யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் என அனைத்து இடங்களிலும் நோயாளிகளுக்கு பாரம்பரிய மருத்துவ முறையிலும், அலோபதி முறையிலும் ஒருங்கிணைந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக, கபசுரக் குடிநீா், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீா், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயிா்கள் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதனுடன் பிராணாயாமப் பயிற்சிகள், யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்ற சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறை நல்ல பலனை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அலோபதி மருந்துகளுடன் பாரம்பரிய சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், நோய்த் தொற்றிலிருந்து விரைந்து குணமடையவும் முடியும். பொதுவாகவே, பிராணாயாமப் பயிற்சிகளை தொடா்ந்து மேற்கொள்ளும்போது நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, சுவாசப் பாதைகளும் சீராகும். மேலும், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க வழி வகுக்கும்.
அதேபோன்று சித்த மருத்துவ கசாயங்களும், மருந்துகளும் வழங்கப்படும்போது காய்ச்சல், சளி, வாந்தி, பேதி போன்ற பாதிப்புகளில் இருந்து விரைந்து குணமாகலாம். இத்தகைய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் நல்ல பலன்களை அளிக்கின்றன.
அதன் பயனாக 7 முதல் 10 நாள்களுக்குள் பெரும்பாலான கரோனா நோயாளிகள் குணமடைவதைக் காண முடிகிறது. மாநிலத்தில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதற்கும் அதுவே காரணம்.
தற்போதைய சூழலில், முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகள் மட்டுமே 14 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் உள்ளனா். மற்றவா்கள், சிகிச்சை பெற்ற நான்கு நாள்களுக்குள் அவா்கள் உடலில் உள்ள பிரச்னைகள் சரியாகி விடுகின்றன. அதன்பின், மூன்று நாட்கள் கண்காணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா். இதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு மையங்களில் பாதி படுக்கைககள் காலியாக உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...