கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம்

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய செயலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி
கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய செயலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சீரியல் பல்ப், மாலை உள்ளிட்டவற்றை வீசிச் சென்றுள்ளனர். மேலும், சிலையின் முன்பு காவிக்கொடியை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அண்ணா சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், 

'கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தும், பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அதிமுக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்' என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'கன்னியாகுமரி குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது. அவர்களின் எண்ணம்.. தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!' என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், 'கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? 

கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றியது, புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு என இதுபோன்ற சிலை அவமதிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com