எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. காந்தசாமி(80) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
எழுத்தாளர் சா. காந்தசாமி
எழுத்தாளர் சா. காந்தசாமி

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. காந்தசாமி(80) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

காலமான சா.காந்தசாமிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் தம் மனைவி ரோஹிணியுடன் சென்னை நந்தவனத்தில் வசித்து வந்தார். மூத்த மகன் சரவணன் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். 

இவரது இறுதிச் சடங்கு இன்று பெசன்ட் நகர் இடுகாட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு 9444043588, 044 24335588

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 ஆம் ஆண்டு பிறந்த இவர், சாயாவனம் என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. 

சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார்.

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் 1995 இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் 1989 ஆம் ஆண்டு சைப்ரசில் நிக்கோசியாவில் அங்கினோ திரைப்பட விழாவில் முதன்முதலாக 20 நிமிட  "காவல் தெய்வங்கள்" என்னும்  ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

பின்னர் சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 

1998 இல் "விசாரணை கமிசன்" என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

தற்போது, சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தவர். இந்திய திரைப்படத்துறையில் தணிக்கைக் குழுவில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தவர். 

எழுத்தாளர் சா. கந்தசாமி, அதர்படயாத்தல், எல்லாமாகிய எழுத்து, அவன் ஆனது, ஆறுமுகசாமியின் ஆடுகள், ரம்பையும் நாச்சியாரும், தக்கையின் மீது நான்கு கண்கள், இன்னொரு மனிதன், பெருமழை நாட்கள், சாயாவனம், தொலைந்துபோனவர்கள், வான்கூவர், யாதும் ஊரே, எழுத்தோவியங்கள் என 7க்கும் மேற்பட்ட நாவல்களும், 11க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com