சா.க. எனும் சாகா எழுத்துக்கலைஞர்

“என் கதைகளில் கதைகளே கிடையாது. கதைகளில் இருந்து கதையைப் புறந்தள்ளியவை என் கதைகள்” என்று சொன்ன எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்
சா.க. எனும் சாகா எழுத்துக்கலைஞர்

“என் கதைகளில் கதைகளே கிடையாது. கதைகளில் இருந்து கதையைப் புறந்தள்ளியவை என் கதைகள்” என்று சொன்ன எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார் (ஜுலை 31, 2020). 

ஒன்றுபட்ட தஞ்சையின் காவிரி தீரத்தில், 1940 ஜூலை 23 ல் ஓரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். வேளாண்மையும் நெசவும் செழித்த மயிலாடுதுறை - கூறைநாடு அவரது பூர்வீகம். “பூம்புகார் என் தாயார் வீடு, அந்தக் காலங்களில் சீர்காழி, பூம்புகார் போன்ற இடங்களைச் சுற்றியிருக்கிறேன். எங்களம்மாகூட பூம்புகாருக்கு காவேரிக்கரையோரமா நடந்தே போகிற பழக்கம் உண்டு. அங்கு கண்ட இளமைக்கால நினைவுகள்தான் என் கதைகளில் வருகிறது” என்று அவரே தான் பிறந்து வளர்ந்த சூழலைக் குறிப்பிடுவார்.
பள்ளிப்பருவத்தில் சா.கந்தசாமியின் குடும்பம் சென்னைக்குப் புலம்பெயர்ந்தது, வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் பட்டயப்படிப்பு படித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.யில் பரிசோதனைக் கூடத்தில் முதலில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி இணை இயக்குநர் நிலையில் விருப்பஓய்வு பெற்றார்.
சா.க. பதின்பருவம் தொடங்கி நூல்களைக் கற்பதில் ஆர்வமுடன் இருந்தார்.
வெ.சாமிநாதசர்மாவின் நூல்களை விரும்பி வாசித்ததைக் கூறுவார். 1964 தொடங்கி சென்னை கன்னிமாரா நூலகத்தில் தீவிர வாசகராக இருந்தார். புத்தக வாசிப்பு போலவே ஓவியம் தீட்டுவதிலும் தொடக்கம் முதலே ஆர்வமுடன் விளங்கினார். பின்னர் சிற்பம், இசை, திரைப்படம், கலைகள் எனத் தன் எல்லைகளை விரிவாக்கினார். தமிழ்ச் சூழலில் இலக்கியத்தைப் பிற நுண்கலைகளோடு, அசோகமித்திரன் திரைப்படத்துறையை எழுத்தோடு இணைத்துப் பார்த்ததைப்போல, சா.க. செயலாற்றினார்.

இலக்கியத்தில் தனக்கெனத் தனித்தன்மையை நிலை நாட்டினார். 1964 களில் சென்னை நண்பர்களுடன் ‘கசடதபற’ இதழைத் தொடங்கி நடத்திய அனுபவம் இவரை நவீன இலக்கியத்தில் நிலை நிறுத்தியது. இவர் மௌனியின் தொடர்ச்சியாகத் தன்னைக் கருதியதுண்டு. சமூகம் சார் சிக்கல்களைக் காட்டிலும், மனித மனம் சார் சிக்கல்களை முதன்மைப் படுத்தினார்.
இவரது சிறுகதைகள் வித்தியாசமான களங்களைத் தொட்டது. பாலுணர்வு, மனவிகாரங்கள் பல கதைகளில் மையம் கொண்டன. தன் போக்கில் வாழ்க்கை நிகழ்வுகளை நடத்திக் காட்டியது இவரது எழுத்து.
நிறைய நாவல்கள் எழுதினார். சாயாவனம், அவன் ஆனது, தொலைந்துபோனவர்கள், ஏரிக்கரையிலே, எட்டாவது கடல், விசாரணைக் கமிஷன், சொல்லப்படாத நிஜம், வான்கூவர், இன்னொருமனிதன், ரம்பையும் நாச்சியாரும், போன்ற நாவல்களை எழுதினார்.
சா.க.வுக்கு முன் அடையாளமாக அமைந்தது ‘சாயாவனம்’, அவரின் ஆக சிறந்த படைப்பு எனலாம். காவிரிக் கரையோரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் வேளாண் வாழ்விலிருந்து தொழிற்கருவி வாழ்வுக்கு மாறுவதை நுட்பமாகச் சித்தரிப்பார். வனம் - காடு அழிவில் நாடு வாழுமா? எனும் உள்ளக் குமுறலை சூழலியல் கவனம் பெறாத 1970களில் மையப்படுத்தியது நாவல், நகரம் x கிராமம், வேளாண்மை x தொழிற்சாலை என்ற முரண்கள் பண்பாட்டு நிலவியல் அடையாளங்களுடன் துலக்கம் பெற்றது.
1998ல் சாகித்திய அகாதெமி விருதுப்பெறற விசாரணைக் கமிஷன் இன்றைய நம் அதிகார வர்க்கம் பற்றிய விவரணையாக அமைந்தது, ஓர் எளிய குடும்பம் காவல், நீதி, தொழிற்சங்கம், சமூகம் ஆகியவற்றால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது என்பதை அவரவர் நியாயங்களுடன் வெளிப்படுத்தும் நாவல் இது. மனித உணர்வுகள், மனச்சிக்கல்கள், முரண்பாடுகள், நடுத்தட்டு மக்கள் உணர்வுகள், ஏழை, எளிய, உதிரிப் பாட்டாளிகள் நிலை ஆகியவற்றை இவர்தம் கதைகள் பிரதிபலித்தன. எழுத்து மரபும், வாய்மொழிமரபும், இவரின் எழுத்தில் கலந்தன. நாட்டார் வழக்காறுகள் பல இயல்பாக இடம்பெற்றன. “மொழி என்பது அலங்காரமாக இருக்கக்கூடாது என்பது என் கொள்கை. அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா. இவர்களைப் படிச்சதுனால ஏற்பட்ட விளைவு, மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்- எனக் கூறிய சா.க. மிக இயல்பான, மிரட்டல் இல்லாத வாசகனை அரவணைத்துக் கொள்ளும் முறையில் எழுதினார். தன் தோற்றம் போலவே எழுத்தும் பகட்டு அல்லாததாக இருக்க விரும்பினார், நூற்றைம்பதுக்கும் குறையாத சிறுகதைகள் எழுதிய அவர், அவற்றில் ஆகச்சிறந்த கதைகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதித்துச் சென்றார் எனலாம். இரணியவதம், கிழக்கு பார்த்த வீடு, மாயவலி, ஆறுமுகசாமியின் ஆடுகள் முக்கியமானவை.
அனைத்துத்தரப்பிலும் கொண்டாடப்பட்ட அவரின் சிறுகதை ‘ஒரு தக்கையின் மீது நான்கு கண்கள்- மீன் பிடிக்கும் ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்குமிடையேயான மனப் போராட்டமே கதை.
பெரியவர், சிறியவர் என்ற தலைமுறை இடைவெளி நுட்பமாகக் கதையில் வெளிப்படும்.
புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவலின் சிறுதுளிபோல வாழ்வைப் பந்திவைப்பதில் இக்கதை மிளிர்கிறது.
கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆவணப்படம், இலக்கியத் தொகுப்புகள் என்று தொடர்ந்து இயங்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்தவராக இருந்தார். எனினும் தமிழ் மொழியின் மீது தீராப்பற்றுக்கொண்டவராக அவர் இருந்தார். சுடுமண் சிலைகள் இவரின் அரிய படைப்பு. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் பற்றிய இவரது ஆவணப் படங்கள் தனித்துவமிக்கவை.
“சா.கந்தசாமியின் கதைகளும் நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும்போது தமிழர்கள் எத்தனைதான் குப்பைப்பத்திரிக்கைகளுக்கு அடிமைப் பட்டிருந்தாலும் இலக்கியரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது- என்ற க.நா.சு.வின் மதிப்பீடு கருதத்தக்கது.
அறுபதாண்டுகள் எழுத்து, இயக்கம் எனப் பயணித்தவர் தன் பயணத்தை நிறைவு செய்துகொண்டார். சா.க. எனும் சாகா எழுத்துக்கலைஞர் என்றும் நினைக்கப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com