தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்னப் பயன்? முதல்வர் பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் கரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விவரங்களை மறைப்பதால் அரசுக்கு என்னப் பயன் என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்னப் பயன்? முதல்வர் பழனிசாமி கேள்வி


சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விவரங்களை மறைப்பதால் அரசுக்கு என்னப் பயன் என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் இன்று ஈரடுக்கு பாலத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமியிடம், செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், தமிழகத்தில் கரோனா மட்டும் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவிலேயே  இறப்பு சதவிகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.

தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகளை மறைப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. கரோனா உயிரிழப்புகளை எப்படி மறைக்க முடியும்? உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு தகவலை வெளியிட்டு வருகிறது. இதுவரை 6.09 லட்சம் பேருக்கு தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறவில்லை. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில்  கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்துரோடு மையப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அதிநவீன சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 

கரோனா நோய் தாக்கம் காரணமாக இறுதி கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com