கூத்தாநல்லூரில் கிளை பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிப்பு

திருவாரூரில் 20க்கும் மேற்பட்ட கிளை பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது.
கூத்தாநல்லூரில் கிளை பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், வாழச்சேரி - வடபாதிமங்கலம் இடையிலான வெண்ணாற்றில், 20க்கும் மேற்பட்ட கிளை பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. 

இது குறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற திருவாரூர் மாவட்டத் தலைவர் க.பாலசுப்ரமணியன் கூறியது.

காவிரி நதியானது கர்நாடகாவின் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பரந்து, விரிந்து கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு என மூன்று பெரிய ஆறாகவும், கல்லணைக்  கால்வாயாகவும் பிரிந்து நெல் உற்பத்திக்கு ஆதாரமாக செல்வ செழிப்பை உண்டாக்குகிறது. இந்தக் காவிரிப் பாசனப் பகுதியில் ஓடக்கூடிய பிரதான ஆறுகளில் ஒன்றான வெண்ணாறு கல்லணையிலிருந்து பிரிந்து நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளை ஆறாகப் பிரிகிறது. 

அது நீடாமங்கலம், ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது. வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டு தக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது.வாழச்சேரி - லெட்சுமாங்குடி இடையேயுள்ள வெண்ணாற்றில் பிரியும் ஏ சேனல் எனப்படும் 5 முதன்மை வாய்க்கால்கள், பெரியதும்,சிறியதுமாகப் பிரிந்து பொதக்குடி, சேகரை, பனங்காட்டாங்குடி, குனுக்கடி, சின்னக் கூத்தாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படும் வாய்க்கால்களாக உள்ளன. 

பொதக்குடி வாய்க்கால் பொதக்குடி பகுதிக்கும், சேகரை வாய்க்கால் வடபாதி வாய்க்கால், மாரியம்மன் கோயில் வாய்க்கால், மிளகு குளம், கீழ கண்ணுச்சாங்குடி, பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கும், லெட்சுமாங்குடி வாய்க்கால் தோட்டச்சேரி உள்ளிட்ட பகுதிக்கும், நாகூரார் மண்டபம் அருகே பிரியும் பனங்காட்டாங்குடி வாய்க்கால் இரண்டாகப் பிரிந்து பூதமங்கலம், மேலப்பனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி உள்ளிட்ட பகுதிக்கும், லெட்சுமாங்குடிப் பாலம் அருகே பிரியும் கூத்தாநல்லூர் வாய்க்கால் இரண்டாகப் பிரிந்து குனுக்கடி, சின்னக் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளின் பாசனத்திற்காகப் பயன்பட்டு வரக்கூடிய பாசன வாய்க்கால்களாகும். இப்பகுதியில் மட்டும், 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. 

மேலும் அதங்குடி, பொதக்குடி பாலம் அருகே பிரியக் கூடிய  பழைய வாய்க்கால் குளங்களுக்கு தண்ணீர் செல்லக் கூடியதாகவும் உள்ளன. இந்த ஏ சேனல் எனப்படும் முதன்மை வாய்க்கால்கள், பி, சி சேனல் எனப்படும் கிளை வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளிட்டவைகள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணித்துறையினால், மூறையாகப் பராமரிக்கப்படாததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் போக சென்றடைய முடியவில்லை.

இதனால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல், நிலங்களை தரிசாகப் போட்டுள்ளனர். விவசாய  உற்பத்தியும் குறைந்து விட்டது. காவிரி, வெண்ணாறு வடிநிலக்கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆறுகள் குமராமத்துப் பணியின் கீழ், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டு வருகிறது. தற்போது, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது,  கிளை பாசன வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரப்பட்டு, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் . 

அனைத்து பாசன வாய்க்கால்களிலும், கருவேல முள்கள், செடி, கொடிகள் மண்டி, குப்பைகள் கொட்டப்பட்டு, கோழி மற்றும் ஆட்டுக் கழிவுகளும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com