
கரூர்: கரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரான அரவக்குறிச்சி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கரூர் ஆட்சியர் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி முன் ஜாமீன் பெற்றதையடுத்து, அவரை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 20 நாட்களுக்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் கரூர் சி பிசிஐடி பிரிவு அலுவலகத்தில் 15-ஆம் தேதி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சம்மனும் அ னுப்பப்பட்டது.
இதையடுத்து கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆய்வாளர் திலகவதி முன் திங்கள்கிழமை வி.செந்தில்பாலாஜி ஆஜரானார். காலை 11.30 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் பிற்பகல் 2.30 மணி வரை விசாரணை நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...