
சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு அண்மையில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-இலிருந்து 59-ஆக உயர்த்தி உத்தரவிட்டது. கடமையை நேர்மையாகவும், நியாயமாகவும் பணிபுரிந்த அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு அதிகரித்திருப்பதில் குற்றம் இல்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டு வரும் அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை, ஓராண்டு நீட்டித்திருப்பது சட்டவிரோதமானது. எனவே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...