
திருச்சி முக்கொம்பு மேலணை பகுதிக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த காவிரி நீரை மலர்கள், நெல்மணிகள் தூவி வரவேற்கும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர்.
திருச்சி: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் திறந்து விட்டப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வந்து சேர்ந்தது.
முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள், விதை நெல்களைத் தூவி வரவேற்றனர். பொதுப்பணித் துறை அலுவலர்கள் பூஜைகள் செய்து, பாசனத்துக்காக காவிரியில் முழுமையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டனர்.
டெல்டா மாவட்டங்களிலும், இதன் அருகாமை மாவட்டங்களிலும் விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்து வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைப்பதே அரிதானது.
நிகழாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகத் தொடர்ந்து இருந்து வந்ததால், அறிவித்தவாறு ஜூன் 12- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில், திருச்சி முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே திங்கள்கிழமை காலையில்தான் தண்ணீர் வந்து சேர்ந்தது. மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் காணப்பட்டதால் அவற்றை நிரப்பியபடி வருவதற்குத் தாமதமானது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு திருச்சி முக்கொம்பு மேலணைக்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரியாற்றில் மலர்களையும், நெல்மணிகளையும் தூவி வரவேற்றனர்.
இதுபோல பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு பூஜைகள் செய்து, காவிரி தண்ணீரை வரவேற்றனர். பின்னர் முக்கொம்பு மேலணை மதகுகள் வழியாக காவிரியிலிருந்து கல்லணைக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணை கல்லணையை சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
முக்கொம்பில் நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அயிலை சிவசூரியன், தீட்சிதர் பாலு, புலியூர் அ. நாகராஜன், பிரசன்ன வெங்கடேஷ், வீரசேகரன், ராஜேந்திரன், நடராஜன், முருகேசன், நடேசன் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...