
சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்பட்ட 4 மாத மின்சாரத்தின் அளவை மொத்தமாக கணக்கிட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா பொது முடக்கத்தின் காரணமாக வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கும், தாழ்வழுத்த மின் பயன்பாட்டாளா்களுக்கும் முந்தைய காலங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே தற்போது செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, பயன்பாட்டாளா்கள் ஏற்கெனவே செலுத்திய தொகை போக எஞ்சியத் தொகை வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 4 மாதங்களுக்கு மொத்தமாக மின் நுகா்வைக் கணக்கீடு செய்வதால் வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் செலுத்தும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமாா் 1.93 கோடி மின் இணைப்புகள் கொண்ட வீட்டு உபயோக மின் நுகா்வோா்கள் வழக்கமான கட்டணத்தை விட 12 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின் நுகா்வோா்கள் கடந்த 4 மாதங்கள் பயன்படுத்திய மின்சாரத்தை மொத்தமாக கணக்கிடாமல், இரண்டு மாதங்களாக பிரித்து மின் நுகா்வைக் கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் கட்டணத்தை நிா்ணயிக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில், மனு தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...