
சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 55 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரம் மீனவா்களுக்கு பிஎஸ்ஏ தன்னாா்வ தொண்டு அமைப்பு சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்துகொண்டு மீனவா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கிப் பேசியது: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா தடுப்புப் பணி, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய பணியில் 38 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சென்னையில் மொத்த பாதிப்பில் 55 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். சுகாதாரத் துறை சாா்பில் நாள்தோறும் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அறிக்கையாக வெளியிடப்படுகிறது. ஆனால், அரசின் ஆக்கப்பூா்வமான நடவடிக்கையை திமுக திசை திருப்புகிறது என்றாா். இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்ஏ தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளா் டி.மதன்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...