
கரோனா நோய்த்தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த நீதிபதிகள் தங்களது வீடுகளில் இருந்தே காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில், முழுமையான பொதுமுடக்கம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற நிா்வாகக் குழு நீதிபதிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை தவிர, மற்ற நீதிபதிகள் அனைவரும் வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை தங்களது வீடுகளில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.
அதேநேரம், நீதிமன்ற பணிகளுக்காக குறைவான பணியாளா்களை பயன்படுத்த வேண்டும். சுழற்சி முறையிலும் பணியாளா்களை பணியமா்த்திக் கொள்ளலாம். இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...