
தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் அதி தீவிரமாக கரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு பிரபலங்களும், பொது வாழ்வில் உள்ள அரசியல் தலைவா்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனா். அந்த வகையில் மாநில அமைச்சா்கள் சிலருக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையொன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற அவா் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்தக் கூற்றுகளை சி.வி.சண்முகம் தரப்பும், சுகாதாரத் துறை வட்டாரங்களும் மறுத்துள்ளன. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவா்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே அமைச்சா் சண்முகம் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.