உடுமலை சங்கர் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: அரசு வழக்குரைஞர்

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு


சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எமிலியாஸ், உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு நிச்சயம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அரிதிலும் அரிதான இந்த வழக்கில், அரசு துவக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறது. ஆணவக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு இந்த வழக்கில் அரசு எந்த அளவுக்கு கவனம் செலுத்தியது என்பதில் இருந்தே தெரிய வருகிறது. எனவே நிச்சயம் சின்னசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் தன்னுடன் படித்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்துக் கொண்டார். 

இதற்கு கெளசல்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் சங்கரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதை தடுக்க வந்த கௌசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கௌசல்யாவின் தந்தை உள்பட 11 பேரை கைத செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமாா், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், ஸ்டீபன் தங்கராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

தண்டனை பெற்ற அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, 6 பேரது தண்டனையை உறுதி செய்யவும், விடுதலை செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் விசாரித்த உயர்நீதிதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் விடுதலை செய்யட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com