தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 9,319 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 9,319 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 9 ஆயிரத்து 319 வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து  துணைத் தலைவர் குல்லு படையாச்சி தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது, இதற்கு ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. கடந்த 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மதுபானங்கள் விற்பனை செய்யும் போது ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பி டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், அதிகவிலைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க, திடீர் சோதனைகள் நடத்த, மூத்த மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவர்களுடன் பறக்கும்படையும் இணைந்து அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க  மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருகின்றனர். அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

மேலும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகள் என மொத்தம் 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளிக்க மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com