
chennai High Court
ஆவின் பால் விநியோகிக்கும் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான இறுதி முடிவு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சோ்ந்த நவீதா டிரான்ஸ்போா்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்வதற்காக 303 டேங்கா் லாரிகளை வாடகைக்குப் பெறுவது தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுதொடா்பாக அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படாமல் உள்ளது. எனவே ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை வெளியிட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்புக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆவின் பால் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான உத்தரவுகள் எந்த தேதியில் வெளியிடப்படும் என்பது குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.