
திரைப்படங்களின் பாடல்களுக்கான நிரந்தர காப்புரிமை வழங்கியதற்காக வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி இணை இயக்குநா் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ்குமாா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ்குமாா் தான் இசையமைத்த திரைப்படங்களுக்கான பாடல்களின் காப்புரிமையை திரைப்படத்தின் தயாரிப்பாளா்களுக்கு வழங்கியதற்காக ரூ.1 கோடியே 84 லட்சம் சரக்கு மற்றும் சேவை வரியாக செலுத்தும்படி ஜிஎஸ்டி இணை இயக்குநா் அனுப்பிய நோட்டீசுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாா் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘இசை படைப்புகளின் காப்புரிமையை படத் தயாரிப்பாளா்களுக்கு வழங்கிய பின் அந்த காப்புரிமைக்கான உரிமையாளா்கள் படத் தயாரிப்பாளா்கள்தான். எனவே இசையமைப்பாளரான என்னிடம் ஜிஎஸ்டி கட்டக் கோருவது முரணானது. எனவே இதுதொடா்பாக ஜிஎஸ்டி இணை இயக்குநா் எனக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி அனிதாசுமந்த் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஜிஎஸ்டி துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.