
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பின்போது சிஏஏ பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தன்னுடைய சுட்டுரைப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
"இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.