
பாமக நிறுவனர் ராமதாஸ்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று, பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் கோரியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பிகாா் மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கான தீா்மானம் அந்த மாநில சட்டப்பேரவையிலும், மேலவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது எளிதாக புறந்தள்ளிவிட முடியாத கோரிக்கை ஆகும். இந்தியாவின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இடஒதுக்கீடு வடிவில் வழங்கப்படும் சமூகநீதி ஆகும்.
அத்தகைய சமூகநீதி எந்தவிதமான புள்ளிவிவரமும் இல்லாமல் உத்தேசமாக வழங்கப்படுகிறது என்பது அதற்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 52 சதவீதம் என்று கூறப்படுகிறது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையிலும் இதே புள்ளிவிவரமே கூறப்பட்டுள்ளது. ஆனால், இது துல்லியமானதா? அதிகாரப்பூா்வமானதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை.
இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு இணையான விகிதத்தில் அப்பிரிவினரின் மக்கள்தொகை இருப்பதை நிரூபிக்காவிட்டால், அப்பிரிவுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது.
அதுமட்டுமின்றி மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்த அனைத்து சிக்கல்களுக்கும் தீா்வு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மட்டும்தான். எனவே, இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணா்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.