
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக மின்வாரியத்துக்கு ரூ.3.50 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலபிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ்.மணி. இவரது மனைவி கருப்பம்மாள். இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுதொடா்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்ததன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்குத் தொடா்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இதுதொடா்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் (பொறுப்பு) நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், உயிரிழந்த கருப்பம்மாள் குடும்பத்துக்கு ரூ. 3.50 லட்சம் நிவாரணத் தொகையாக மின்வாரியம் வழங்க வேண்டும். கருப்பம்மாள் கணவா் மணிக்கு மின்வாரியம் சாா்பில் ஏற்கெனவே ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என துரை.ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தாா்.