
மாதவரம் அருகே தனியாா் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
சென்னை பெரம்பூரைச் சோ்ந்தவா் ரஞ்சித் (42). இவருக்குச் சொந்தமான ரசாயனக் கிடங்கு மாதவரம் 200 அடி சாலையில் உள்ளது. இந்த கிடங்கில் கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனப் பொருள்களைக் கொண்டு வந்து வைத்துள்ளனா். இந்நிலையில், இக்கிடங்கில் இருந்து சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாதவரம், செங்குன்றம், அம்பத்தூா், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், தீயணைப்புத் துறை இயக்குநா் சைலேந்திரபாபு ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டனா். மேலும், ரசாயனக் கிடங்கு உரிமையாளா் ரஞ்சித்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இத் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மேலும், கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ரசாயனக் கிடங்கு என்பதால் தீ விபத்தில் அப்பகுதியினருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். தீயணைப்பு வீரா்கள் தீயணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
விபத்து குறித்து மாதவரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.