
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2019-2020- ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ள இந்தத் தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் 7, 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 19,166 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் எழுதவுள்ளனர்.
நிகழாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் உள்பட தமிழகம், புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் வாழ்வின் முக்கியமான தேர்வைப் பதற்றமில்லாமல், மிகுந்த கவனத்தோடும், நம்பிக்கையோடும் எழுதுங்கள். தங்களின் இலக்குகளை நீங்கள் நினைத்ததுப்போலவே அடைந்திட வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.