
கோப்புப்படம்
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை அரசு சார்பில் பங்கு ஏற்ற இலங்கை வெளிஉறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா, ஐ.நா. பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் 30/1, 40/1 ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசு விலகுவதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டுகள் மீது, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்போம் என்றும் கூறி இருக்கிறார்.
இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட், “ஏற்கனவே ஒப்புக்கொண்ட விசாரணையைத் தவிர்த்துவிட்டு, மாற்று முயற்சி செய்வது வருத்தம் அளிக்கின்றது; இலங்கை அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது” என்று கூறி உள்ளார்.
மேலும், நல்லிணக்க முயற்சிகளில் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக் காப்பு விடங்களில் இருந்தும் இலங்கை அரசு பின்வாங்குவது ஆபத்தான நடவடிக்கை; இலங்கை அரசு சிறுபான்மை சமூகங்களின் தேவைகளுக்காகச் செயல்பட வேண்டும்; மக்களின் அன்றாட வாழ்க்கைகூட இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவினரால் கண்காணிக்கப்படுவதும், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், வெறுக்கத்தக்க பேச்சுகள், சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள் குறித்தும்’ ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் கவலை தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் தொடருவதையும், ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.