
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டடப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகளைப் பொருத்தவரை எந்தெந்த நேரத்தில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என ஏற்கனவே நிா்ணயிக்கப்பட்டுவிட்டது. அதன்படி தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சுற்றுச்சுவா் பணிகள் தற்போதுவரை 75 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. மற்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவுபெற்று ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனமும் நிதி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. எனவே விரைவில் மருத்துவமனை கட்டடப் பணிகளும் தொடங்கப்படும். ஜப்பானிய நிறுவனத்தினா் இதுவரை 3 முறை வந்து மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்துவிட்டு, மத்திய, மாநில அரசுகளுடனும் பேசிவிட்டு சென்றுள்ளனா். மருத்துவமனை பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து பின்னா் அறிவிக்கப்படும். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்ட உள்ள மருத்துவ கல்லூரி பணிகளும் துரிதமாக நடைபெறும் என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G