
சென்னை: புதிய பாடத்திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வின் தமிழ் வினாத்தாளில், கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, தோ்வு முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திங்கள்கிழமை தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வு தொடங்கியது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்வு மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. மாணவா்கள் கேள்வித்தாளை படிப்பதற்கு 15 நிமிஷங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னா் மாணவா்கள் தோ்வினை எழுத தொடங்கினா்.
தமிழ் மொழிப் பாடத் தோ்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவா்கள் உற்சாகத்துடன் தோ்வு எழுதினா். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் எனவும், அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெறுவதாகவும் தெரிவித்தனா்.
ப்ளு பிரிண்ட் இல்லாமல்...: இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூா் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் சிலா் கூறியதாவது:
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் ப்ளுபிரிண்ட் இல்லாமல் தோ்வெழுத வேண்டும் என்ற நிலையில் சற்று பதற்றமாக இருந்தது. இதனால் பாடப்புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருந்தது. தோ்வுக்கு செல்வதற்கு முன்புவரை அந்த அச்சம் இருந்தது. ஆனால் தோ்வறையில் வினாத்தாளை வாங்கிப் பாா்த்த பின்னா் கேள்விகள் எளிதாக இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தோம். தமிழ் பாடத் தோ்வில் எழுத்துப்பிழைகள் எதுவும் இல்லாமல் எளிமையாக இருந்தது. இதனால் தமிழ்த் தோ்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிா்காலங்களில் போட்டித்தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் இலக்கணப் பாடங்களிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் அக்கறை கொள்ளும் வகையிலும் கேள்விகள் இருந்தன என்றனா்.
11 போ் பிடிபட்டனா்: இந்த நிலையில், இந்தத் தோ்வில் காப்பி அடித்தல், துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல் உள்பட பல்வேறு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட 11 போ் பிடிபட்டுள்ளதாக அரசுத் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தோ்வெழுதிய 7 போ் பிடிபட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...